×

மேம்பால பணிகள் விறுவிறு மதுரை – தேனி சாலையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை, செப்.28: மதுரை – தேனி சாலையில் காளவாசல் சந்திப்பில் மேம்பால பணிகள் வேகப்படுத்தப்படூடுள்ளன. இதனால் இப்பகுதியில்போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை திட்ட குழாய்களை அகற்ற, ரூ.1.20 கோடி மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது. இதில், தேனி செல்லும் பிரதான சாலையில் காளவாசல் முதல் முடக்குச் சாலை வரையும், உசிலம்பட்டி முதல் நாகமலை புதுக்கோட்டை வரையிலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆனால், விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகளில் இந்த சாலை குறுகலாக இருந்ததாலும், காளவாசல் சந்திப்பு துவங்கி மூன்று இடங்களில் கடந்த 2016 முதல் 2018 வரை மூன்றாண்டுகளில் நடந்த, 37 விபத்துக்களில், 15 பேர் உயிரிழந்த நிலையிலும், அப்பகுதியில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி மொத்தம், 1.20 கி.மீ. நீளம், 11 மீட்டர் அகலத்தில், ரூ.53.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கின. இதில் முடக்குச்சாலை சந்திப்பில் பாலம் வளைந்து திரும்பும் இடத்தில், இணைப்பை கட்டி முடிக்க போக்குவரத்து போலீசாரிடம் நெடுஞ்சாலைத்துறை அனுமதி கோரியது. அனுமதி கிடைத்த நிலையில், நேற்று முன்தினம் முதல் இணைப்பு பணிகள் நடைபெறும் இடம், தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு, முடக்குச் சாலை சந்திப்பில் உள்ள ஒற்றைச்சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு, விபத்துக்களை தடுக்க இருபுறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், எச்.எம்.எஸ்.காலனி சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்ட குழாய்களை அகற்ற, மாநகராட்சி தரப்பில் ரூ.1.20 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், அதற்கு அனுமதி பெற்று மீதமுள்ள பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மேம்பால பணிகள் விறுவிறு மதுரை – தேனி சாலையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Diruviru ,Madurai ,Theni Road ,Mushroom ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...